அவதூறு பேசிய ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- டி.டி.வி.தினகரன்...
![](https://static.wixstatic.com/media/d572ed_ca0bd7381f69468a945cfa7f6e020bc8~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_ca0bd7381f69468a945cfa7f6e020bc8~mv2.jpg)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என அழைத்த தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க.-வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “குற்றவாளியான ஜெயலலிதா’’ என்ற வார்த்தையை பிரயோகித்து இருக்கிறார்.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் `அம்மா’ எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படும் ஓர் கனிவுளத்தின் இலக்கணத்தை, கருணையே வடிவான இருப்பிடத்தை, அதுவும் அவர் பிறந்த நாளில், அவர் மறைந்ததற்கு பிறகு வரும் முதல் பிறந்த நாளில் கோடானு கோடி தொண்டர்கள் மிகுந்த நெகிழ்வோடும், வேதனையோடும் ஆழ்ந்திருக்கும் வேளையில் இது போன்ற ஒரு அவதூறை, கடுகளவும் உண்மையற்ற பழிச்சொல்லை மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி விமர்சித்திருப்பது அவரது பண்பாடற்ற தன்மையையே காட்டுகிறது.
கோடானு கோடி மக்களின் இதயங்களில் மனித தெய்வமாகவே வாழும் எங்கள் அம்மாவின் நினை வலைகளை, திட்டங்களுக்கு பெயர் சூட்டி தான் நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ இல்லை என்பதை உலகம் அறியும்.
உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமுமென அனைத்து தீய குணங்களையும் தன்னகத்தே கொண்டு என்னதான் பொது வாழ்க்கையில் மு.க. ஸ்டாலின் புனிதர் வேடம் போட்டாலும், அவர் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் வன்மமும், வன்முறையும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளால் பீறிட்டு வந்திருக்கிறது.
மு.க. ஸ்டாலின், தான் பயன்படுத்திய அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று, தனது பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என்றும், அவ்வப்போது பொது இடங்களில் கோமாளித் தனங்கள் புரியும் மு.க. ஸ்டாலின் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி பேசுவதை நிறுத்திக் கொள்வதே உத்தமம் என்றும் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments