நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது தென் ஆப்ரிக்கா !!
![](https://static.wixstatic.com/media/d572ed_d618c7896b5d4847bd8e165832171fc0~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_d618c7896b5d4847bd8e165832171fc0~mv2.jpg)
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி, 5 ஒருநாள், 3 டெஸ்ட், 1 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டி.20 தொடரை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.
போட்டி துவங்கும் முன் மழை பெய்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 34 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு துவக்கவீரர் டிகாக் (69) அரைசதம் அடித்து கைகொடுத்தார். ஆம்லா (35), டுபிளசி (14), டுமினி (1), மோரிஸ் (16) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் கேப்டன் டிவிலியர்ஸ் தனியாளாக போராடினார்.
இவருக்கு பிலிக்வாயோ நல்ல கம்பெனி கொடுத்தார். தென் ஆப்ரிக்க வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சவுத்தி பந்தில் பிலிக்வாயோ ஒரு இமாலய சிக்சர் அடிக்க, வெற்றி பெற கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. சவுத்தி வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் 33.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் அடித்து தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Comments