சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…போலீசார் எச்சரிக்கை
![](https://static.wixstatic.com/media/d572ed_9123ccff53454a34b0240e6aa4fda12b~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_9123ccff53454a34b0240e6aa4fda12b~mv2.jpg)
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவிற்கும், ஓபிஎஸ்சுக்கும் தொடர்ந்து பனிப்போர் நீடித்து வந்த நிலையில், சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து, ஒபிஎஸ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அன்று முதல், முதல்வர் நாற்காலியை கைப்பற்ற தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் சசிகலா.
இந்நிலையில்,நேற்று ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்ற ஓபிஎஸ் தான் சசிகலாவால் மிரட்டப்பட்டதாகவும், ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தான் அதிமுக.,வுக்கு எந்த நிலையிலும் துரோகம் செய்யவில்லை என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தற்போது பதிவியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் பன்னீர்செல்வத்தை தான்தான் முதல்வர் பதவியில் அமர வைத்ததாகவும், அப்போது பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் தன்னைதான் முதல்வராக அமருமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். அன்று இருந்த மனநிலையில் தான் அதனை ஏற்க மறுத்ததாகக் கூறியுள்ள சசிகலா, அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பலர் கருத்துத் தெரிவித்து வருவதாகவும், அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments