பாக்.,மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 70 பேர் பலி; 150 பேர் படுகாயம்...
பாகிஸ்தான் செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தெற்கே சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் லால் ஷாபாஸ் என்ற மசூதி உள்ளது. இதில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு வழிபாடு முடிந்தபிறகு, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையொட்டி இன்று இரவு ஆண்கள், பெண்கள் என 500க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
அப்போது, பெண்கள் பிரிவில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில், அங்கிருந்த 70 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா தெரிவித்துள்ளார். மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது...
Bình luận