‘‘துவங்கியது தாய்க்குலங்களின் தாகம்; நாளை மறுநாள் ஜல்லிக்கட்டைப் போன்று விஸ்வரூபம்’’
![](https://static.wixstatic.com/media/d572ed_f0f2ddc757b34df191e95db386313daa~mv2.jpg/v1/fill/w_696,h_392,al_c,q_80,enc_auto/d572ed_f0f2ddc757b34df191e95db386313daa~mv2.jpg)
இந்தியா முழுவதும் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிபொருள் எடுப்பதற்காக சுமார் 35 இடங்களை பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு. சுமார் 15 கிராமங்களை தமிழகத்தில் தேர்ந்தெடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்கு அப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தை நடத்தினர். மாணவர்கள் மட்டுமல்லாது ஐ.டி., ஊழியர்களும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போன்று போராட்டம் மற்றும் பேரணி மேற்கொண்டனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவவட்டம், நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோகார்பன், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தினை எதிர்த்து கிராமம் மக்களின் முதல்கட்ட போராட்டம் தொடர்ந்து, தற்போது அந்த கிராமத்திலுள்ள தாய்க்குலங்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதேபோன்றுதான், அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கிராம பெண்கள் தங்களது குழந்தைகளுடன் போராட்டத்தை தொடங்கி வெற்றிக்கு வித்திட்டனர். இதனைத்தொடர்ந்துதான், சென்னை மெரீனா உள்ளிட்ட உலகம் முழுவதும் போராட்டம் வெடிக்க ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.
மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துவக்கப்பட்ட இந்தப்போராட்டம் வெற்றியடைய ஜல்லிக்கட்டு இளைஞர்களும் களத்தில் குதிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இளைர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சியும் வரும் 26ம் தேதி, மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், இளைஞர்களும் பெண்களும் ஏராளமானோர் இங்கு கூடுவார்கள் என்ற நிலையில், நெடுவாசல் உண்ணாவிரதப் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
Comments