வெற்றியை தாரை வார்த்தது கொல்கத்தா !
![](https://static.wixstatic.com/media/d572ed_bc95d4eee4674afa898ea929f9111bb3~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_bc95d4eee4674afa898ea929f9111bb3~mv2.jpg)
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
பத்தாவது ஐ.பி.எல் சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பலே பாண்டியாக்கள்;
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் கம்பீர் ஆகியோர் அந்த அணிக்கு மீண்டும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். புனேக்கு எதிரான முதல் ஆட்டத்தைப் போல இருவரும் பெரிய ஸ்கோரை எட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், க்ரூனால் பாண்டியா அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளைச் சாய்த்து கொல்கத்தா ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிதைத்தார்
பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே அவர் மெக்லங்கனிடம் கேட்ச் கொடுத்து கம்பீர் (19) வெளியேறினார், அதே போல் மற்றும் உத்தப்பா 4 ரன்னிலும் யூசுப் பதான் 6 ரன்னிலும் க்ரூனல் பாண்டியாவின் பந்தில் அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மானம் காத்த மணிஷ் பாண்டே;
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் மும்பையின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு பக்கம் அணியின் முண்ணனி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றினாலு மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 5 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 178 ரன்கள் எடுத்தது.
சொதப்பல் பேட்டிங்;
அதனை தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பட்லர் 28 ரன்களும் பார்தீப் படேல் 30 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் சர்மா, போலார்டு, க்ரூனல் பாண்டியா சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
ராணா அரைசதம்;
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி 28 பந்துகளுக்கு 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த ராணா 10 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
வெற்றியை தாரைவார்த்த கொல்கத்தா;
கடைசி ஒரு ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் லெக் பைஸாக 2 ரன்கள் எடுத்தது மும்பை, இரண்டாவது பந்தை கொல்கத்தா வீரர் சூர்யா பிடிக்க தவறியதால் அது பவுண்டரிக்கு சென்றது, அதற்கு அடுத்த பந்திலும் பாண்டியா கொடுத்த கேட்சை ரிசி தவான் கோட்டைவிட்டதால் 5வது பந்தில் பவுண்டரி அடித்து மும்பைக்கு வெற்றியை பெற்று கொடுத்தார் பாண்டியா
Comments