பறக்கும் விமானத்தின் மீது நடனம்! பெங்களூரு விமான கண்காட்சியில் உலக சாதனை!
![](https://static.wixstatic.com/media/d572ed_60180a2d7430461999eda29e07f414b5~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_60180a2d7430461999eda29e07f414b5~mv2.jpg)
பெங்களூருவில் இந்தியவிமானப்படை விமான கண்காட்சி நடந்தது. அதில் இந்தியவிமானப்படையின் வெவ்வேறு வகையான இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள், சிறுவிமானங்கள், இலகுரகபோர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்தியவிமானப்படையின் பெருமைமிகு அங்கமாகவிளங்கும் தேஜஸ் இலகுரக போர்விமானம், சாரங்க் ஹெலிகாப்டர், தனுஷ், ருத்ரா இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சுகோய்-30 இலகுரக போர்விமானம்,சீதா விமானம், டைகர்மாத் விமானம், ஹாய்க் ஹெலிகாப்டர், எச்டிடி-40 விமானம், அமெரிக்காவின் எஃப்-16 இலகுரக போர்விமானம்,பிரான்சின் ரஃபேல் இலகுரக போர்விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்கள் பார்வையாளர்களின் கைதட்டல்களை தட்டி சென்றன.
டிஆர்டிஓ தயாரித்துள்ள ஆவாக்ஸ் கண்காணிப்புவிமானம் முதல்முறையாக வானில் பறந்தது மக்களின் ஆரவாரத்திற்கு இடமளித்தது. எச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ள எல்யூஎச் எனப்படும் இலகுரக பயன்பாடு ஹெலிகாப்டர் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு, வானில் குறுக்கும் நெடுக்கும், மேலும் கீழும் பறந்து பார்வையாளர்களை கவர்ந்தது. பறக்கும் விமானத்தில் ஸ்கான்டிவியன், யக்கோலெக்ஸ் விமானக்குழுவினர் நடத்திய மயிர் கூச்செரியும் சாகசங்கள் பார்வையாளர்களை கிறங்கடித்தன.
இந்தியாவில் முதல்முறையாக நிகழ்த்தப்படும் பறக்கும் விமானத்தின் மீதான நடனம், உடல்நெளிவுகள், நடைப்பயிற்சிகள் இந்திய பார்வையாளர்களுக்கு புதுமையானதாகவும், புதியதாகவும் இருந்தது. விண்ணில் விர்ரென சீறிய போர்விமானங்கள், எதிர்பாராவிதமாக அடித்த பல்டிகள் காண்போரை சிலிர்க்க வைத்தன.
தேஜஸ் விமானம், வானத்தில் சுழன்றடித்து செய்த சாகசங்கள் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாராட்டை பெற்றன. 2 மணி நேரம் நடைபெற்ற 72 விமானங்களின் வான்வெளி சாகசங்கள் பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு தள்ளிவிட்டது.
இந்தியாவின் சொந்ததொழில்நுட்பத்தில் உருவான போர்விமானங்களின் செயல்திறன்,தொழில்நுட்பம், பயன்பாட்டு வீச்சு உலக நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமல்ல இந்திய பிரதிநிதிகளின் புருவங்களையும் உயர்த்தின.
Comments