உதயமானது எம்.ஜி.ஆர்- அம்மா- தீபா பேரவை, புதிய இயக்கம் தொடங்கினார் ஜெ.தீபா!
![](https://static.wixstatic.com/media/d572ed_31b368fd80a04e1b8cec954ca4f552de~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_31b368fd80a04e1b8cec954ca4f552de~mv2.jpg)
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக ஒ.பி.எஸ் அணி, சசிகலா அணி என்று இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.
இதுகுறித்து தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவரது புது அமைப்பின் பெயரை அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இன்று முதல் எனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகிறது.
அம்மாவின் அரசியல் வாரிசாக தொடர அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததால், அவர்களது வேண்டுகோளை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது தலைமையில் இரட்டை இலையை மீட்போம்.
என்மீது அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறேன் ஏழை, எளிய மக்களின் துயரத்தை துடைக்க, விவசாயிகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து ஆசியாவிலேயே முதல் மாநிலமாக மாநிலமாக தமிழகத்தை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன்.
அம்மாவின் கனவை நினைவாக்க அவர் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன். தற்போதுள்ள தமிழகத்தின் அரசியல் சூழலில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுள்ளது , இதற்கு பின்னால் இருக்கும் துரோக கூட்டத்திலிருந்து தமிழக மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன்.
என்னை நம்பி வந்த யாரையும் நான் கைவிட மாட்டேன் தமிழக மக்களை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்சென்று, நிலையான ஒளிமயமான ஆட்சியை ஏற்படுத்துவேன் என்று அவர் தெரிவித்தார்.
コメント