பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் தனி கோர்ட்டு தயார்! சசிகலா இன்றே ஆஜராக உத்தரவு!
- crazynewschannel
- Feb 15, 2017
- 1 min read

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம், நேற்று பெங்களூரு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதோடு சசிகலா உள்பட மூவரும் விசாரணைக்காக, பெங்களூரு தனி கோர்ட்டில் உடனே சரணடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து, நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு கட்டிடத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ஏற்கனவே இந்த கோர்ட்டு அறையில் வைத்து தான் நீதிபதி குன்கா, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோர்ட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூரு 48-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் இன்று ஆஜராவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் கோர்ட்டில் ஆஜரான உடன் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி அஸ்வத் ஆய்வு செய்வார்.
அதனைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இன்று பெங்களூரு கோர்ட்டு வளாகங்களில் பரபரப்பான சூழல் இருக்கு என்பதால், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comentarios