மெரினாவில் பிரகாசித்த அதே வெளிச்சம் மீண்டும் 18ஆம் தேதி பிரகாசிக்கும் – நடிகர் லாரன்ஸ் உறுதி!
![](https://static.wixstatic.com/media/d572ed_86662eff35164a20814b79d0de4254e0~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_86662eff35164a20814b79d0de4254e0~mv2.jpg)
உலக தமிழர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வரும் 18ஆம் தேதி, தமிழர்கள் அனைவரும் வெளிச்சம் ஏற்றி கொண்டாட நடிகர் லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள், என தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம், உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
மெரினா போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கொண்டுவரப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மெரினா போராட்டத்தின் வெற்றிவிழா தொடர்பாக பேசிய நடிகர் லாரன்ஸ், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை காண இளைஞர்கள், மாணவர்கள் என மொத்தமாக 300 பேருடன் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பாதுகாப்பு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக என்னை மட்டும் அனுமதித்தனர் என்றார் லாரன்ஸ். இளைஞர்களும், மாணவர்களும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தமக்கு மிகுந்த வருத்தம் அளித்தது என கூறிய அவர், இதனால், வரும் 18ம் தேதி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வெற்றியை கொண்டாட மெரினா சரியான இடமாக இருக்காது. எனவே, அவரவர் வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று கேக் வெட்டி ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட வேண்டும் என லாரன்ஸ் கோரிக்கை விடுத்தார்.
வரும் 18ம் தேதி மாலை 7 மணி முதல் 7.15 மணி வரை உலகத்தமிழர் அனைவருக்கும் ஜல்லிக்கட்டு வெற்றி மட்டும் தான் மனதில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும்,மெரினாவில் எப்படி பிரகாசித்ததோ அதே போல், டார்ச் அடித்தோ, அல்லது மெழுகு வர்த்தி ஏந்தியோ, உலகத்தமிழர் அனைவரும் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட வேண்டும் என்று நடிகர் லாரன்ஸ் தனது அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
Comments