வாகனங்கள் பதிவுக்கும் ஆதார் எண் கட்டாயம்?
![](https://static.wixstatic.com/media/d572ed_2383a70d25fc417793e3134da8d3ca26~mv2.jpg/v1/fill/w_696,h_385,al_c,q_80,enc_auto/d572ed_2383a70d25fc417793e3134da8d3ca26~mv2.jpg)
வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவோர் வாகனங்களைப் பதிவு செய்யும்போது ஆதார் எண், மொபைல் எண், பான் எண் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு உண்ணும் மாணவர்கள், தங்களது ஆதார் எண்ணைக் கட்டாயம் பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதுமட்டுமில்லாமல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்குவதற்கான பிரதம மந்திரி உஜ்வால் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் இணைப்பு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேபோல், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பயிர்ச்சேதம், வறட்சி ஆகிய காரணங்களால் பயிர்க்காப்பீடு பெறும் விவசாயிகளிடம் ஆதார் எண்ணைப் பெறுமாறு வங்கிகளுக்கு மத்திய விவசாயத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பித்து விண்ணப்ப நகலை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய நடவடிக்கைகள் எல்லாம் மத்திய அரசு எடுத்ததுதான்.
ஆனால், இந்தமுறை மாநில அரசு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பதிவு செய்ய ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பான் எண்ணைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் வாகனங்கள் பதிவு செய்யப்படமாட்டாது எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இன்னும் எது எதற்கெல்லாம் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கப் போகிறார்களோ தெரியவில்லை… பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Commentaires