ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதி, கலாநிதிமாறன் உட்பட 6 பேர் விடுவிப்பு : சிபிஐ நீதிமன்றம்
![](https://static.wixstatic.com/media/d572ed_49452b382c934ec98776bfcb5716f9f9~mv2.jpg/v1/fill/w_651,h_386,al_c,q_80,enc_auto/d572ed_49452b382c934ec98776bfcb5716f9f9~mv2.jpg)
ஏர்செல்—மேக்சிஸ் வழக்கில் இருந்து தயாநிதிமாறன், கலாநிதிமாறன், காவிரி கலாநிதி உட்பட ஆறு பேர் நிரபராதி என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தி.மு.க.,வை சார்ந்த தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, சென்னையை சார்ந்த ஏர்செல் நிறுவனப்பங்குகளை மலேசியாவை சார்ந்த மேக்சிஸ் நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக டில்லி சிபிஜ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது.இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டநிலையில், அமலாக்கப் பிரிவு, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தது,
அதில் மொரீஷியஸ் நிறுவனங்களிடம் இருந்து சவுத் ஏஷியா எப்எம் பிலிமிட் மற்றும் சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ 742.58 கோடி கைமாறியதாக கூறி, சட்டவிரோத பணபரிமாற்றம் தடை சட்டத்தில் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளில் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்ட கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த மாதம் நடந்த விசாரணையில் நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார்.
இன்று காலை தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ஓபிஷைனி ஒத்திவைத்தார்.
இதன்படி இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஓபி ஷைனி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. ஆகையால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்கிறேன் என தீர்ப்பளித்தார்.