புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகாது – பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டம்!
- crazynewschannel
- Feb 22, 2017
- 1 min read

புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர்-8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
புதிய ரூபாய் நோட்டுக்கள் இவ்வாறு தான் இருக்கும் என்று, புதிய புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி ரூ.100, 50, 20 ஆகிய குறைந்த மதிப்பிலான நோட்டுகளும் விரைவில் வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியானது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று கூறினார். மேலும் ரூ.500 மற்றும் அதற்கும் குறைவான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஏடிஎம்களில் பணம் இல்லை என்ற புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏடிஎம்களில் சிலர் அளவுக்கு அதிகமாக பணம் எடுப்பதால் மற்றவர்களுக்கு பணம் இல்லாத நிலை ஏற்படுகிறது, இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக, கூறினார்.
Comments